கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 300 ஆண்டுகள் பழமையான போர்வாள் காட்சிக்கு வைப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 300 ஆண்டு பழமையான போர்வாள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு பொருள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இம்மாதம் 300 ஆண்டு பழமையான போர் வாள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் பழங்காலந்தொட்டே ஒரு எல்லைப்புற பகுதியாகும். இது ஒரு முல்லைநிலப் பகுதியாகவும் இருப்பதால், கால்நடைகளுக்கான சண்டைகள் முதல் நாட்டை விரிவுபடுத்த செய்யும் பெரும் போர்கள் வரை நடந்த மாவட்டமாக விளங்குகிறது.
இப்போர்களுக்கு வில் - அம்பு முதல், பீரங்கி வரை பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது போர் வாள் ஆகும். வாள் என்பது பொதுவாக இரும்பினால் ஆன கூரிய விளிம்பு கொண்ட நீளமான அலகுடைய குத்துவதற்கும், வெட்டுவதற்கும் பயன்படும் ஆயுதமாகும். இதன் வடிவமானது பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு காலகட்டங்களுக்கும் ஏற்ப வேறுபட்டு காணப்படும்.
WhatsApp us ➜ Click Here
சுமார் 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அதாவது இரும்புக் காலத்துக்கும் முந்தைய வெண்கலப் பண்பாட்டுக் காலத்திலேயே வாள் தோன்றியது. வாட்களை குறுவாள், உடைவாள் அல்லது குத்துவாள் என்றும் போர்வாள் என்றும் வகைகளாகப் பிரிப்பர். இரண்டும் போர்க் கருவிகள் என்றாலும் சமயத்துக்கு ஏற்றவாறு இவை பயன்படுத்தப்படும். அருகில் சென்று குத்த குத்துவாளும், குதிரை மேலிருந்து சண்டையிட பட்டாக்கத்தி என்னும் போர்வாளும் பயன்படும்.
அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை என்னும் இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் இத்தகைய இரும்பு வாள்கள் கிடைத்துள்ளன. இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. தற்போது காட்சிப் படுத்தப்பட்டுள்ள வாள் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைசாமி என்பவர் தங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து வீட்டில் வைத்து வழிபட்டு வந்ததாக கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.
இந்த வாள் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்தியதாக தெரியவருகிறது. ஆனால், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்று காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்
FOR ADVERTISING ON OUR SOCIAL MEDIA PLATFORMS, CONTACT US VIA WHATSAPP
Comments
Post a Comment